எங்கும் "ஜயவேவா கோஷம். அப்பே ஹமுதாவட்ட ஜயவேவா அப்பே ஜனாதிபதித்துமாட்ட ஜயவேவா" என்ற கோஷங்கள் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்தன. தொலைக்காட்சிகளில் மக்களின் பேட்டிகள். புலிகள் கொல்லப்பட்டமையை வரவேற்றும் நாடு விடுவிக்கப்பட்டது தொடர்பான மகிழ்ச்சியையும் அவர்கள் அனைவரும் வெளியிட்டனர். இடையில் ரணில் விக்கிரமசிங்கவை திட்டித் தீர்க்கவும் அவர்கள் மறக்கவில்லை. அவர் இருந்திருந்தால் பிரபாகரனுக்கு தமிழ் ஈழம் கிடைத்திருக்குமாம். நாடு ஒன்றுப்பட்டு விட்டதாகவும் இனி சிங்கள பறங்கியர் முஸ்லிம்கள் சுதந்திரமாக தடையின்றி வாழலாம் என்று தேசியத் தொலைக்காட்சியில் சிங்கக் கொடியை ஏந்தி வெற்றிக்களிப்பில் இருக்கும் ஒருவர் குறிப்பிடுகின்றார். எங்கே அதில் தமிழ் என்ற இனம்? அந்த நபர் மறந்து விட்டாரா அல்லது அறிந்தே அந்த சொல்லை கூற மறந்தாரா?
இவை அனைத்தும் நாடு புலிகளிடமிருந்து மீட்கப்பட்டமையை கொண்டாடும் நிகழ்வுகளாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏன் வாகனத்தில் சிங்கக் கொடியினை பறக்கவிட மறந்து விட்டாயா? என்ற அதட்டலுடன் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருக்கும் படைச் சிப்பாய் வினவுகின்றான். நாங்கள் தலைகுனிந்து மன்னிப்புக் கேட்கும் தோரணையில் அவரைப் பார்க்கின்றோம். திகைப்பும் அச்சமும் நடந்தவற்றை ஏற்கவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் தவிக்கின்றது இங்கு தலைநகர தமிழினம்.
அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியும் ஆட்கொள்கின்றது. வெற்றிக்களிப்பில் மமதையில் சுற்றித்திரிகின்ற சிங்கள மக்கள் மத்தியில் அமைதியாக இருப்பதனை விட வேறு என்ன தான் வழி தற்பொழுது எமக்கு இருக்கின்றது? என்ற கேள்வியினை ஆளுக்காள் மாறி கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
கேட்பாரற்று அட்டகாசங்கள் தொடர்கின்றன. நாடு பயங்கரவாதத்திலிருந்து முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரத்திற்கு அதனை கொண்டாடும் முகமாக வீடுகளில் வாகனங்களில் சிங்கக் கொடிகளை பறக்கவிடப்பட வேண்டும். அரச அலுவலகங்களில் கட்டாயம் ஒரு வாரத்திற்கு சிங்கக் கொடி பறக்கவிடப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் கட்டளை. கட்டளை மற்ற ஒரு இனத்தின் தன்மானத்தினை வெகுவாகப் பாதிக்கின்றது. வெற்றிக்களிப்பில் நிகழும் இந்த செயற்பாடுகள் யாவும் சகோதர இனத்தினைப் பாதிக்கும் என்ற கவலை துளியும் இன்றி வெறியாட்டமாக மாறியுள்ளது என்பது பெரும் கொடுமையாகும்.
இன்று கொழும்பில் நிகழும் இந்த வெற்றிக்களியாட்டங்கள் ஒரு இனத்திற்கு எதிரான வன்மத்தினை விதைக்கும் செயல்களாகி விட்டன என்பதே உண்மை. தமிழர் கடைகள் முன் திரண்ட சிங்களவர்கள் புலிகளுக்கு எதிரான வெற்றியினைக் கொண்டாட பட்டாசுகளை வெடிக்க பாற்சோறு உண்டு மகிழ வலுக்கட்டாயமாக நிதி திரட்டியிருக்கின்றனர் என்ற செய்தி தமிழர்களுக்கு நல்ல செய்தி அல்ல. தமிழ் அடையாளங்களுடன் சென்றவர்கள் கேலிக்குள்ளாக்கப் பட்டுள்ளனர். தகாத வார்த்தைப் பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் செறிந்திருக்கும் பகுதிகளில் திட்டமிட்டு பட்டாசுகள் வெடிக்க வைக்கப்பட்டு பாற்சோறு வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. அதில் கலந்து கொள்ளாத தமிழர்கள் மிரட்டப்பட்டிருக்கின்றார்கள். தமிழர்கள் வீடுகளில் வாகனங்களில் சிங்கக் கொடியை ஏற்றுமாறு வற்புறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த செயற்பாடுகள் அனைத்தும் தமிழர்களை கலக்கமுறச் செய்துள்ளன. தமிழினத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் காட்டுமிராண்டித்தனங்களுக்கு இந்த செயற்பாடுகள் அத்திவாரமாகி விடுமோ என்று அச்சம் மேலோங்கியுள்ளது. பதில் பேசவோ மறுதலிக்கவோ திராணியற்று நடப்பவற்றை ஏற்கும் சங்கடமான நிலையில் தலைநகர் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை. தமிழினத்தினை காட்டிக் கொடுத்து தன்மானம் இழந்த தமிழர்கள் இதற்கு விதிவிலக்கு.
0 comments:
Post a Comment